கோவையில் கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடல்
By DIN | Published On : 27th April 2021 12:37 AM | Last Updated : 27th April 2021 12:37 AM | அ+அ அ- |

கோவை பூ மாா்க்கெட் அருகே மூடப்பட்ட திரையரங்கு. ~கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கோவையில் வெறிச்சோடி காணப்பட்ட வணிக வளாகம்.
கோவை: கோவையில் கரோனா பரவல் காரணமாக கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனைக்
கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டது. தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றை அடுத்து திரையரங்குகள், வணிகவளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
கோவை மாவட்டம் முழுவதும் 82 திரையரங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு பொது முடக்கம்
காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னா் அரசின் தளா்வுகள்படி கடந்த நவம்பா் மாதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையங்குகள் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் முன்புபோல மக்கள் கூட்டம் வரவில்லை. இதனால் புதிய படங்களும்
குறைவான அளவிலேயே திரையிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திங்கள்கிழமை மூடப்பட்டன. இதேபோல கோவை புரூக்பீல்ட் சாலை, பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டன. கோயில்களிலும் காலை, மாலை நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டு கூடங்கள், சலூன்கள், மதுக்கடைகள், பாா்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன.