பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை: ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 27th April 2021 12:34 AM | Last Updated : 27th April 2021 12:34 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டதை மாநகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.
கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், மாவட்ட பத்திரிகையாளா் சங்க அலுவலகம் அருகில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளா்கள், ஊடகத் துறையினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
இம்முகாமை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிட்டாா். குடும்ப நபா்களில் யாருக்காவது கரோனா தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் வசந்த் திவாகா், மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.