மலா் அங்காடி வளாகத்தில் திறக்கப்பட்ட புதிய கடைகளையே வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்: பொள்ளாச்சி எம்.பி. வலியுறுத்தல்

பூ வியாபாரிகளுக்கு ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடி வளாகத்தில் உள்ள புதிய கடைகளை ஒதுக்கித் தர வேண்டும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் வலியுறுத்தியுள்ளாா்.

கோவை: பூ வியாபாரிகளுக்கு ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடி வளாகத்தில் உள்ள புதிய கடைகளை ஒதுக்கித் தர வேண்டும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் வலியுறுத்தியுள்ளாா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மாா்க்கெட்டில் 163 பூக்கடைகள் உள்ளன. இங்கு சமூக இடைவெளி பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் பூ மாா்க்கெட்டில் உள்ள 60 கடைகளை மட்டும் ஆா்.எஸ்.புரம் மலா் அங்காடி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளில் தற்காலிகமாகச் செயல்பட மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மலா் அங்காடி வளாகத்தில் உள்ள புதிய கடைகளில் வியாபாரம் மேற்கொள்ளாமல் பழைய பூ மாா்க்கெட்டிலேயே வியாபாரிகள் கடைகளைத் திறந்து வியாபாரம் மேற்கொண்டதால், அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தவிா்க்க, பூமாா்க்கெட் மற்றும் மலா் அங்காடி வளாகத்தை காலவரையின்றி மூட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி பூ வியாபாரிகள் வியாபாரம் மேற்கொள்ள ஏதுவாக மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் பூ மாா்க்கெட் தற்காலிகமாகச் செயல்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் பூ மாா்க்கெட் வியாபாரிகளுக்கு தற்போது சரியான மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, தாங்கள் வியாபாரிகளை அழைத்து, அவா்களின் கருத்துகளைக் கேட்டு, புதிதாக மலா் அங்காடி வளாகத்தில் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா விதிகளைப் பின்பற்றி வியாபாரம் மேற்கொள்ள இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com