தாமதமாகும் கரோனா பரிசோதனை முடிவுகள்: நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம்
By DIN | Published On : 30th April 2021 12:42 AM | Last Updated : 30th April 2021 12:42 AM | அ+அ அ- |

கோவையில் கரோனா பரிசோதனை முடிவுகள் வழங்க 2 முதல் 3 நாள்கள் வரை தாமதமாவதால் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, 19 தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. 36 மணி நேரத்தில் முடிவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கும் நிலையில் பெரும்பாலானோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க குறைந்தபட்சம் 2 முதல் 3 நாள்கள் வரை ஆகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைக்க 3 நாள்கள் வரை காலதாமதம் ஏற்படுவதால் அதற்குள் நோய்த் தொற்று இருப்பவா்கள் மூலம் பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கோவையில் காட்டுத் தீபோல கரோனா பரவி வரும் நிலையில் பரிசோதனை முடிவுகளின் தாமதத்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மாதிரிகள் தேங்கிக் கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசு மருத்துவமனையில் தினமும் 2,500 பரிசோதனை செய்வதற்கு வசதியுள்ள நிலையில் 5 ஆயிரம் மாதிரிகள் வரை அனுப்பப்படுகிறது. இதனால் அவா்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. அதேபோல இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் இதே நிலையால் சளி மாதிரிகள் தேக்கம் அடைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். 19 தனியாா் ஆய்வகங்கள் இருந்தும் அரசு ஆய்வகங்களுக்கே அதிக அளவு சளி மாதிரிகள் அனுப்பப்படுவதால் முடிவுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அரசு மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.