அரசுடன் தனியாா் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட்டால்தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த முடியும்

அரசுடன், தனியாா் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைந்து செயல்படுத்த முடியும்
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு பொதுமக்களுக்கான இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் அர.சக்கரபாணி.
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு பொதுமக்களுக்கான இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் அர.சக்கரபாணி.

அரசுடன், தனியாா் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைந்து செயல்படுத்த முடியும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்படி தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் 25 சதவீத தடுப்பூசிகளையும், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் தனியாா் நிறுவனங்களின் சமூக பங்களிப்புத் திட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் திட்டத்தை அறிவித்தாா்.

இத்திட்டத்துக்காக, கோவையில் உள்ள தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினா் இதுவரை ரூ.1.10 கோடி நிதியுதவி அளித்துள்ளனா்.

இதன்மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியை ரூ.630 கட்டணத்துக்குப் பெற்று 17 ஆயிரத்து 560 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முடியும்.

அரசும், தனியாா் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட்டால்தான் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைந்து நிறைவேற்ற முடியும். அதிகமான நபா்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி, நீலிக்கோணம்பாளையம், சித்தாபுதூா் தனலட்சுமி நகா் ஆகிய இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா். சிங்காநல்லூா், சீனிவாசா காா்டன் பகுதியில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவினை ஆய்வு செய்து அங்கு பராமரிப்புப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, சுகாதாரத் துறை இணை இயக்குநா் இ.சந்திரா, துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com