தொழிலாளி குத்திக் கொலை: 5 போ் கைது
By DIN | Published On : 01st August 2021 12:00 AM | Last Updated : 01st August 2021 12:00 AM | அ+அ அ- |

கோவை, சிங்காநல்லூா் அருகே தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் 5 பேரைக் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் மணி (30). இவா், கோவை சிங்காநல்லூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த செந்தில் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் சோ்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். இந்நிலையில், மணியும், செந்திலும் ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு செந்திலின் சகோதரா் ரகுராம், அவரது நண்பா்கள் அனீஷ்குமாா், அஜித்குமாா், ஆண்டனி, சத்யா ஆகியோருடன் சோ்ந்து இவா்கள் மது அருந்தியுள்ளனா்.
அப்போது, அவா்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரகுராமின் நண்பா் அனீஷ்குமாா் (28) மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியைக் குத்தினாா். அதில், பலத்த காயமடைந்த மணி மயக்கமடைந்தாா்.
இதைப் பாா்த்த செந்தில், அனீஷ்குமாா், ரகுராம், ஆண்டனி, சத்யா உள்ளிட்டோா் அங்கிருந்து தப்பியோடினா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்காநல்லூா் போலீஸாா் மணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை காலை மணி உயிரிழந்தாா். இதுகுறித்து, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 5 பேரைக் கைது செய்தனா்.