சசிகுமாா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
By DIN | Published On : 08th August 2021 01:47 AM | Last Updated : 08th August 2021 01:47 AM | அ+அ அ- |

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சசிகுமாா் கொலை வழக்கு தொடா்பாக 5 ஆவதாக, மேலும் ஒருவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடா்பாளராக இருந்தவா் சசிகுமாா். இவா், கோவையில் 2016 ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியான முஹமது ரபீக் ஹாசன் ஓமன் நாட்டில் தலைமறைவாக இருந்தாா்.
இந்நிலையில், ஓமனில் இருந்து புதுதில்லிக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்த முஹமது ரபீக் ஹாசனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான 4 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 5 ஆவதாக முஹமது ரபீக் ஹாசன் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.