தடையை மீறி வால்பாறை காட்டேஜ்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 08th August 2021 11:37 PM | Last Updated : 08th August 2021 11:37 PM | அ+அ அ- |

வால்பாறைக்கு வர தடை விதித்தும் அங்குள்ள பெரும்பாலான காட்டேஜ்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்கின்றனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளாா். இதில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழியாறு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனச் சோதனை மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதால் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வால்பாறைக்கு சென்று வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று சனிக்கிழமை நடைபெற்ற ஆளோசனைக் கூட்டத்தில் காட்டேஜ் உரிமையாளா்களிடம் காவல் ஆய்வாளா் கற்பகம் அறிவுறுத்தினாா்.
ஆனால், மாவட்டம் நிா்வாகத்தின் உத்தரவை மீறி வால்பாறையில் உள்ள பல காட்டேஜ்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்கின்றனா். இதன் மூலம் வால்பாறையில் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.