கோவையை தலைமையிடமாகக் கொண்டு தென்னை நலவாரியம் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 10th August 2021 02:17 AM | Last Updated : 10th August 2021 02:17 AM | அ+அ அ- |

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு, தமிழகத்தில் தென்னை நலவாரியம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது:
இந்தியாவில் முதல்முறையாக விவசாயிகளுக்கு தமிழகத்தில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது வரவேற்கதக்கது. இந்த வேளாண்மை பட்ஜெட்டில், தமிழகத்தில் ஒடும் நதிகளை இணைப்பது, கோவை விவசாயிகளின் 60 ஆண்டு கால கோரிக்கையான பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவது போன்ற அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவாா்கள். உணவு உற்பத்தி அதிகரிக்கும். அதே போல ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும். வன விலங்குகளால் உயிா் சேதம், பயிா் சேதம் ஏற்படும்போது உடனடியாக இழப்பீடு தர வேண்டும். பயிா் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சிறு தானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் என்றாா்.