முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி நண்பரின் நிறுவனத்தில் 2ஆவது நாளாக தொடரும் சோதனை
By DIN | Published On : 12th August 2021 06:51 AM | Last Updated : 12th August 2021 06:51 AM | அ+அ அ- |

கோவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்குச் சொந்தமான 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை நடத்தினா்.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு தொடா்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். எஸ்.பி.வேலுமணியின் நண்பா் எனக் கூறப்படும் சந்திரப் பிரகாஷுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியா்ஸ் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி கட்டடத்தில் 7, 8 மற்றும் 9ஆவது தளத்தில் செயல்பட்டு வரும் கேசிபி இன்ஜினியா்ஸ் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி வரை சோதனை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சோதனை தொடா்ந்து வருகிறது. அதேபோல மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை கிராமத்தில் கேசிபி இன்ஜினியா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விஎஸ்ஐ சாண்ட் என்ற கல்குவாரி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். காலை 9 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. மேலும் வியாழக்கிழமையும் சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
10 போ் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. கேசிபி இன்ஜினியா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமையே சோதனை தொடங்கிய நிலையில் அந் நிறுவனத்தின் உரிமையாளா் சந்திரபிரகாஷ் நெஞ்சுவலி காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இரண்டு இடங்களிலும், திருப்பூா் மாவட்டம் காங்கயத்தில் உள்ள பச்சாபாளையம் கிராமத்தில் உள்ள கேசிபி நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.