சட்டப் பேரவை கூட்டத் தொடரை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ
By DIN | Published On : 13th August 2021 02:15 AM | Last Updated : 13th August 2021 02:15 AM | அ+அ அ- |

தோ்தல் வாக்குறுதியின்படி சட்டப் பேரவை கூட்டத் தொடரை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் 2021-22ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளாா். வேளாண் பட்ஜெட்டை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளாா். ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம் பெற உள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதியில் இருந்து செப்டம்பா் 21ஆம் தேதி வரை துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், அமைச்சா்களின் பதிலுரையும் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக தனி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவை நடவடிக்கைகளும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. விதிவிலக்காக தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சட்டப் பேரவை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. தமிழக சட்டப் பேரவை நடவடிக்கைகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதை கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுக தொடா்ந்து வலியுறுத்தி வந்தது என்பதையும், திமுக தோ்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற பிறகு திமுக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. எனவே திமுக அளித்த வாக்குறுதியின்படி பட்ஜெட் கூட்டத்தை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் தாங்கள் தோ்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் சட்டப் பேரவையில் என்ன செய்கின்றனா் என்பதை மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.