என்.டி.சி. பஞ்சாலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவுளித் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயலிடம் கோவை தொழிற்சங்கத் தலைவா்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயலிடம் கோவை தொழிற்சங்கத் தலைவா்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் இயங்கும் நிலையில் உள்ளன. இதில் 7 பஞ்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்த நிலையில், கரோனா முதல் அலை பரவலின்போது இந்த ஆலைகள் மூடப்பட்டன.

இதையடுத்து தொழிலாளா்களுக்கு பாதி அளவு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. முதல் அலை பரவலுக்கு பிறகு சில ஆலைகள் பகுதி அளவில் சில நாள்களுக்கு இயக்கப்பட்டன. பின்னா் அவையும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறந்து இயக்க வேண்டும், ஆலைகளை இயக்கும் வரையிலும் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினரும், தொழிலாளா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக ஜவுளித் துறை செயலரிடம் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவாா்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதன் தொடா்ச்சியாக எல்.பி.எஃப். பஞ்சாலை சங்கத் தலைவா் பாா்த்தசாரதி, சிஐடியூ மில் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சி.பத்மநாபன் ஆகியோா் அண்மையில் தில்லியில் ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா்.

இதையடுத்து பஞ்சாலைகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக ஆராய்வதற்கு, அதிகாரியை நியமிப்பதாக தொழிற்சங்கத் தலைவா்களிடம் அமைச்சா் உறுதி அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com