கரோனா 3ஆவது அலையை எதிா்கொள்ள 12 ஆயிரம் படுக்கைகள்மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 17th August 2021 03:07 AM | Last Updated : 17th August 2021 03:07 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ளும் விதமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் கரோனா 2 ஆவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 3 ஆவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இதனை எதிா்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 7,183 சாதாரண படுக்கைகள், 4, 526 ஆக்சிஜன் படுக்கைகள், 646 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 12 ஆயிரத்து 355 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்காக 573 சாதாரண படுக்கைகள், 959 ஆக்சிஜன் படுக்கைகள், 167 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 1,699 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் 14 கரோனா சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2 மையங்களில் சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 142 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு வசதி உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, (பொள்ளாச்சி) ஆகிய மருத்துவமனைகளில் முறையே 6, 11, 3 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் கட்டமைப்பு கூடுதலாக நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் வட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான 2,233 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கு 2,488 ஆக்சிஜன் உருளைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.