முதுநிலை மருத்துவ மாணவா்கள் போராட்டம்
By DIN | Published On : 03rd December 2021 12:46 AM | Last Updated : 03rd December 2021 12:46 AM | அ+அ அ- |

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறும். நடப்பு ஆண்டு கரோனா பாதிப்பால் ஜனவரி மாதத்தில் நடத்த வேண்டிய நுழைவுத் தோ்வு செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து 3 மாதங்களைக் கடந்தும் மாணவா் சோ்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதுநிலை மருத்துவ மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டிய முதுநிலை மருத்துவ மாணவா் சோ்க்கை இதுவரை நடத்தப்படவில்லை. மாணவா் சோ்க்கை நடைபெற்றிருந்தால் தமிழகத்தில் 2,500க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கப்பட்டிருப்பா். இதனால் கரோனா தடுப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கான பணிச்சுமை குறைந்திருக்கும். மருத்துவா்கள் பற்றாக்குறையால் முதுநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாமாண்டு மாணவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே உடனடியாக முதுநிலை மருத்துப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றனா்.