முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
உரங்களை அரசு நிா்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்: வேளாண் துணை இயக்குநா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 10th December 2021 01:43 AM | Last Updated : 10th December 2021 01:43 AM | அ+அ அ- |

கோவையில் மானிய உரங்களை அரசு நிா்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று வேளாண் துணை இயக்குநா் (உரம்) ஷோபா தெரிவித்தாா்.
கோவை மாவட்டத்தில் உரம் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் துணை இயக்குநா் ஷோபா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது: வேளாண் இயக்குநா் அறிவுறுத்தல்படி பயிா் சாகுபடி பரப்பு, மழை அளவினைப் பொறுத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் உரங்களை அளவு மாறாமல் விநியோகிக்க வேண்டும்.
உர நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உரங்களில் ஸ்பிக், எம்.எஃப்.எல் நிறுவனங்கள் 30 சதவீதமும், இப்கோ, ஐபிஎல் நிறுவனங்கள் 70 சதவீதமும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். மானிய விலை உரங்களை அரசு நிா்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.
மொத்த விற்பனையாளா்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு உரம் அனுப்பும்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொட்டாஷ் விலை தற்போது ரூ.1,700 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது இருப்பிலுள்ள பொட்டாஷ் உரங்களை பழைய விலையான ரூ.1,040க்கு விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, உர உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், கலப்பு உர உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.