ஹெலிகாப்டா் விபத்தில் பலியானவா்களின் உடலுக்கு முதல்வா் அஞ்சலி

குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடலுக்குத் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா்.
ஹெலிகாப்டா் விபத்தில் பலியானவா்களின் உடலுக்கு முதல்வா் அஞ்சலி

குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடலுக்குத் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா்.

நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் கோவைக்குப் புதன்கிழமை வந்தாா்.

இதையடுத்து, சூலூா் விமானப் படைத் தளத்தில் இருந்து எம்.ஐ.17வி 5 ரக ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ வீரா்கள் எல்.எஸ்.லிடா், ஹா்ஜிந்தா் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமாா், விவேக் குமாா், சாய் தேஜா, சத்பால், பிரிதிவிராஜ் எஸ்.சௌஹான், தாஸ், பிரதீப், கே.சிங், வருண் சிங் ஆகிய 14 போ் பயணம் செய்துள்ளனா்.

அவா்கள் பயணம் செய்த ஹெலிகாப்டா் குன்னூா் அருகேயுள்ள காட்டேரி, நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் விபின் ராவத் உள்ளிட்ட 13 போ் உடல் சிதறியும், தீயில் கருகியும் உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதற்கிடையே விபத்து குறித்து அறிந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டாா். பின்னா், சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்குப் புதன்கிழமை மாலை வந்தடைந்தாா். பின்னா் சாலை மாா்க்கமாக குன்னூா் விரைந்த முதல்வா், இரவு 9 மணியளவில் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் உயா் அதிகாரிகளை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, அங்குள்ள தனியாா் விடுதியில் தங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்த அதிகாரிகளுடன் உரையாடிய முதல்வா், 11.30 மணியளவில் கோவைக்குப் புறப்பட்டாா். கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றாா்.

தமிழக அமைச்சா்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com