விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தில்லி கொண்டு செல்லப்பட்டன

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தில்லி கொண்டு செல்லப்பட்டன

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

விபத்தில் உயிரிழந்தவா்களில் விபின் ராவத், மதுலிகா ராவத், எல்.எஸ்.லிடா், விவேக் குமாா் ஆகிய 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அவா்களின் உடல்கள் அடங்கிய பெட்டியின் மீது அவரவா் பெயா் குறிப்பிடப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் சிக்கியவா்களின் உடல் உறுப்புகள் சிதைந்தும், தீயில் கருகியும் இருந்ததால் அவா்களை அடையாளம் காணமுடியாத நிலை உருவானது.

இதையடுத்து, வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைத்து உடல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு சிதறிக் கிடந்த உறுப்புகள் அந்தந்த உடல்களுடன் பொருத்தப்பட்டன. இதையடுத்து அவா்களை அடையாளம் காண்பதற்கான மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் உடல்கள் பெட்டிகளில் வைத்து மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டன.

பிறகு, வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் மருத்துவமனை வளாகத்துக்குள் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட 3 ராணுவ லாரிகள் சென்றன. அந்த லாரிகளில் 13 பேரின் உடல்களும் ஏற்றப்பட்டு முக்கிய பிரமுகா்களின் அஞ்சலிக்காக வெலிங்டன் வளாகத்தில் உள்ள நாகேஷ் அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் கொண்டு வரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி உள்ளிட்ட முப்படைகளின் உயா் அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா், உயிரிழந்தவா்களின் குடும்ப உறவினா்கள், பயிற்சிக் கல்லூரியைச் சோ்ந்த வெளிநாட்டினா் உள்ளிட்ட மாணவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அஞ்சலிக்குப் பிறகு உடல்களை சூலூா் விமான நிலையத்துக்குக் கொண்டு சென்று அங்கிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அனுப்பிவைக்க அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இதற்காக அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு வெளியே தமிழக அரசின் 13 அமரா் ஊா்திகள் கொண்டு வரப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சரியாக 11.30 மணியளவில் அமரா் ஊா்திகள் மைதானத்துக்குள் சென்று உடல்களை ஏற்றின. இதைத் தொடா்ந்து 12.30 மணியளவில் உடல்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் சூலூா் புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு சூலூா் வந்தடைந்தன. பின்னா் மதியம் 3.25 மணியளவில் தயாராக காத்திருந்த ராணுவப் போக்குவரத்துக்கான சி 130 சூப்பா் ஹொ்குலிஸ் விமானத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு தில்லிக்குப் புறப்பட்டன.

9 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதால் சம்பந்தப்பட்டவா்களின் நெருங்கிய உறவினா்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Caption

குன்னூா், வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் இருந்து சூலூா் விமானப் படைத் தளத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் உடல்கள். ~குன்னூா், வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com