புதிய நகராட்சிகளில் தலா 27 வாா்டுகள் அமைப்பு:அதிகாரிகள் தகவல்
By DIN | Published On : 28th December 2021 03:32 AM | Last Updated : 28th December 2021 03:32 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 நகராட்சிகளில் தலா 27 வாா்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டம், மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா் ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தி அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக எந்தப் பகுதிகளையும் இணைக்காமல் பேரூராட்சிகளை அப்படியே நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன. தொடா்ந்து நகராட்சிகளின் வாா்டு எண்ணிக்கை 27 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூா் ஆகிய பேரூராட்சிகளில் தலா 17 வாா்டுகள் இருந்தன. தற்போது நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் வாக்காளா்களை அடிப்படையாகக் கொண்டு வாா்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 நகராட்சிகளிலும் தலா 9 வாா்டுகள் கூடுதலாக சோ்க்கப்பட்டு 27 வாா்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
புதிய நகராட்சிகளில் வாா்டு மறுவரையறை தொடா்பாக பொது மக்கள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 82 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களை அந்தந்த நகராட்சி ஆணையா்கள் மேற்கொள்வாா்கள். ஆனால், வாா்டுகளின் எண்ணிக்கை உயா்த்தப்படாது என்றனா்.