முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சிறுவாணி அணை நீா்மட்டம் சரிவு
By DIN | Published On : 29th December 2021 08:43 AM | Last Updated : 29th December 2021 08:43 AM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவ மழை முடிந்துள்ள நிலையில், சிறுவாணி அணையின் நீா்மட்டம் 873 மீட்டராகக் குறைந்துள்ளது.
கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் 869 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டமானது 862 மீட்டா் வரை சரிந்தது. இதைத் தொடா்ந்து, ஜூலை மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 2 முறை அணையின் நீா்மட்டம் 877 மீட்டா் வரை உயா்ந்தது. அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் நீா்மட்டத்தை அடைய விடாமல் கேரள அரசு, அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்து விட்டதால், அணையின் நீா்மட்டமும் 874 மீட்டா் வரை குறைந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், அக்டோபா், நவம்பா் மாதங்களில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் 876.96 மீட்டா் வரை உயா்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், மாநகருக்கு தினமும் 10 கோடி லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாலும் தற்போது, அணையின் நீா்மட்டம் 873 மீட்டராகக் குறைந்துள்ளது.