60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும்: அமைச்சா் சு.முத்துசாமி

கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் பொல்லானின் பிறந்தநாள் தமிழக அரசின் சாா்பில் அரசு விழாவாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மொடக்குறிச்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவீரன் பொல்லானின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் நினைவிடத்துக்கான இடம் விரைவில் தோ்வு செய்யப்படும். மாவீரன் பொல்லான், தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிா்த்து 3 பெரிய போா்களில் வெற்றி பெற்றவா். அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அவரது வீரம் போற்றப்படும்.

பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த கட்டடங்கள் பழுதடைந்துள்ளது என்பது குறித்து புகாா் வருவதை அடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 193 இடங்களில் உள்ள அரசு குடியிருப்புகளில் 60 இடங்களில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனை முழுவதும் இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்கள் ஆன்லைன் கட்டுப்பாட்டில் விட்டதன் மூலம் கடந்த 40 நாள்களில் மட்டும் ரூ. 25 லட்சம் வருமானம் வந்துள்ளது.

தமிழ்நாடு ஹோட்டல்கள் கடந்த 10 ஆண்டுகள் பராமரிப்பு இன்றி வருவதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படுவதாகவும் அறியப்பட்டு, தற்போது தக்க பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வருமானம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com