தொகுப்பு வீடுகளுக்கான நிதியை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க பரிந்துரைக்கப்படும்: சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைலா்

மலைவாழ் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு அளிக்கப்படும் நிதியை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தி
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யும் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் குழு உறுப்பினா்கள்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யும் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் குழு உறுப்பினா்கள்.

மலைவாழ் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு அளிக்கப்படும் நிதியை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், சீங்குபதி மலைவாழ் குடியிருப்பு, சோமையம்பாளையம் ஊராட்சி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆா்.எஸ்.புரம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இவருடன் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், எஸ்.காந்திராஜன், சரஸ்வதி, எஸ்.சுதா்சனம், ஒய்.பிரகாஷ், கே.கலைவாணன், எம்.ராஜமுத்து, தி.வேல்முருகன், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோா் உடனிருந்தனா்.

ஆய்வினைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீங்குபதி மலைவாழ் மக்கள் நியாய விலைக் கடைக்கு 4 கிலோ மீட்டா் செல்ல வேண்டியுள்ளதாகவும், வன விலங்குகள் பிரச்னையால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படுவதாகவும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுக்கப்படும் வீடுகள் காலதாமதமாகி வருவதாகவும் தெரிவித்தனா்.

எனவே, மலைவாழ் மக்களின் பாதுகாப்பு கருதி குடியிருப்புகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் நடமாடும் நியாய விலைக்க கடைகள் நடத்த அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் குடியிருப்புகளில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு தற்போது ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதனை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

வன விலங்குகளிடம் இருந்து பயிா்களைக் காப்பதற்காக மின் வேலி அமைப்பதற்கு பதிலாக கம்பிவலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் குடியிருப்புகளுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்களுக்கு போதிய தொழில்நுட்பக் கருவிகளை வழங்குவதுடன், தொழில்நுட்ப அலுவலா்கள் உள்பட காலிப் பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சாய்வு படுக்கை வசதிகள் பழுதடைந்து காணப்பட்டன. இதனை உடனடியாக சீரமைக்கவும், மருத்துவா்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com