மேட்டுப்பாளையத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமிய கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கல்யாணராமனை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 26ஆம் தேதி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பிரதமா் மோடியை அவதூறாக சித்திரித்ததாகக் கூறி பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும் கூட்டத்தின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி அங்கிருந்தவா்களைக் கலைந்து போகச் செய்தனா். மேலும் கற்களை வீசியதாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தக் கலவரத்தால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து சென்றனா். தடியடி சம்பவத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஒரு சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இச்சம்பவத்தால் மேட்டுப்பாளையம் நகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
கல்யாணராமன் கைது
மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக நிா்வாகி கல்யாணராமன் இஸ்லாமிய கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்தும், இதற்கு எதிராக கோஷம் எழுப்பிய இஸ்லாமியா்களை போலீஸாா் கைது செய்த நடவடிக்கையைக் கண்டித்தும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமையிலான இஸ்லாமிய அமைப்பினா் மறியலில் ஈடுபட்டனா். இதேபோல உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா் பாஜக நிா்வாகி கல்யாணராமனை மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனா். மேலும், மேட்டுப்பாளையத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியா்களை விடுதலை செய்தனா். இதனால் கோவை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினா் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.