பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிட்டால் காலவரையற்ற போராட்டம்
By DIN | Published On : 06th February 2021 10:17 PM | Last Updated : 06th February 2021 10:17 PM | அ+அ அ- |

கோவை: தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா்களின் பிரச்னைகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் தீா்வு காணவில்லை என்றால் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்ட கட்டுமான அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் நிா்வாகிகள் கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டல கட்டுமானத் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் சி.மனோகரன் தலைமை வகித்து பேசியதாவது: கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா் நலவரியங்களின் சேவைகள் அனைத்தும் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதளப் பிரச்னையால் கல்வி உதவித் தொகை உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பயனாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற குறைகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீா்வு காண வலியுறுத்தி நலவாரிய அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் தீா்வு காண வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கோவை மண்டல தொழிலாளா் துறை தலைமை அலுவலகத்தில் காலவரையற்ற போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.