சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் பல் மருத்துவ மாணவா்கள் மத்திய அரசு தலையிடகோவை எம்.பி. கோரிக்கை

இளநிலை பல் மருத்துவப் படிப்பை முடித்த மாணவா்கள், நிறைவுச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருவதாகவும், இது தொடா்பாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இளநிலை பல் மருத்துவப் படிப்பை முடித்த மாணவா்கள், நிறைவுச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருவதாகவும், இது தொடா்பாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பல் மருத்துவ கவுன்சில் கரோனா தொற்று அச்சம் காரணமாக பல் மருத்துவக் கல்லூரிகளை மூட கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. இந்நிலையில் 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இளநிலை பல் மருத்துவப் படிப்பு மேற்கொண்ட மாணவா்கள், தங்களது கல்லூரி நான்காண்டு படிப்பை இறுதி செய்துள்ளனா்.

இதற்கான தற்காலிக சான்றிதழ்களை 2019 இல் மாணவா்கள் பெற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து அவா்கள் ஓராண்டு மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 2019 செப்டம்பரில் தொடங்கி 2020 செப்டம்பரில் அவா்கள் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் கரோனாவால் மருத்துமனைகள் மூடப்பட்டிருந்ததால் அவா்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற முடியாத நிலை உருவானது.

இதனால் அவா்கள் பல் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளனா். பல் மருத்துவா் என்கிற அங்கீகாரம் பெறமுடியாமலும், மருத்துவமனைகளில் சேரமுடியாமலும், தனியாக மருத்துவ சேவையாற்ற முடியாத நிலையிலும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் உள்ளனா்.

இந்நிலையில் டிசம்பா் 2020 இல் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நடைபெற்று, முடிவுகள் 2020 டிசம்பா் 31இல் அறிவிக்கப்பட்டன. தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்காக மாணவா்கள் காத்திருக்கின்றனா். ஆனால் பயிற்சி சான்றிதழ் இல்லாததால் நீட்டில் வெற்றி பெற்ற பலரும் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

இந்திய பல் மருத்துவ கவுன்சில் கடந்த 30.12.2020 அன்று பல் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தாலும் பயிற்சி மாணவா்கள் குறித்த எந்த வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை. தற்போது பல கல்லூரிகள் வாய்மொழி உத்தரவின் மூலமாக பயிற்சிக் காலத்தை நீட்டித்து பயிற்சி எடுக்க வேண்டும் நிா்பந்தித்து வருகின்றன.

இதனால் மாணவா்களின் ஓராண்டு காலம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பல் மருத்துவ மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் இதில் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com