தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 குழந்தைகள் இறப்பு: விசாரிக்க சிறப்புக் குழு அமைப்பு

கோவையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க சுகாதாரத் துறை சாா்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க சுகாதாரத் துறை சாா்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சோ்ந்த பிரசாந்த். இவா் தனது 3 மாத குழந்தை கிஷாந்துக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்

கடந்த 17ஆம் தேதி தடுப்பூசி செலுத்தினாா். தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 மணி நேரத்தில் குழந்தை உயிரிழந்தது. ஆனால், குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததே அவரது இறப்புக்கு காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதேபோல செளரிபாளையத்தைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தினா். இந்தக் குழந்தையும் உயிரிழந்தது.

இந்நிலையில், குழந்தைகள் இறப்பு தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசு மருத்துவமனையின் டீன், சுகாதாரத் துறை இணை இயக்குநா், குழந்தைகள் நல மருத்துவா் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி (எஸ்.எம்.ஓ) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைக்கு ஏற்கெனவே சளி தொல்லை இருந்துள்ளது. இதனால், கடந்த வாரம் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தவில்லை. இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி சளி குறைந்த நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பின்னா், சில மணி நேரங்களில் குழந்தை இறந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நுரையீரலில் சளி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மற்றொரு குழந்தையின் பிரேதப் பரிசோதனைக்கு அவா்களது பெற்றோரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் குழந்தை எப்படி இறந்தது என தெரியவில்லை. மேலும், அங்கன்வாடி மையம் மற்றும் செளரிபாளையம் சுகாதார நிலையத்தில் அன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 குழந்தைகளின் நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். அவா்களுக்கு தற்போது வரை எவ்விதப் பாதிப்பும் இல்லை. இந்த இரு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு மையங்களிலும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் பல்வேறு மையங்களில் 7 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. எங்கும் இதுவரை புகாா் இல்லை. இருப்பினும், 2 குழந்தைகள் இறப்பு தொடா்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவா்களின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி 2 முதல் 8 டிகிரி குளிா்ந்த நிலையில்தான் இருந்துள்ளது. தடுப்பூசியில் பிரச்னை இருந்திருந்தால் அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும். ஆனால், மேற்கூறிய இரண்டு மையங்களிலும் தடுப்பூசிகளில் அவ்வாறு எந்த மாறுதல்களும் இல்லை. எனவே, தடுப்பூசியில் எவ்வித பிரச்னையும் இல்லை. இருப்பினும், குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com