தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை எடுப்போம்: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை எடுப்போம் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கும் கட்சியின் மாநகர கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்எல்ஏ, மாநகர மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா (எ) ஆா்.கிருஷ்ணன்.
நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கும் கட்சியின் மாநகர கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்எல்ஏ, மாநகர மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா (எ) ஆா்.கிருஷ்ணன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை எடுப்போம் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் பங்கேற்ற சிங்காநல்லூா், கோவை மேற்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் ஆகிய 4 தொகுதிகளைச் சோ்ந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி வீதம், தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சிகளில், ரூ.12,500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. பிளீச்சிங் பவுடா், துடைப்பம், மின் விளக்குகள் ஆகியவை வாங்கியதில் கூட உள்ளாட்சித் துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அமைச்சா்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள், திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என அண்ணா, கருணாநிதி மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன். மக்கள் என்னிடம் அளித்த கோரிக்கை மனுக்கள் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்தப் பெட்டியில் உள்ள மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தனியாக அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.

கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்று கூறி வந்தாா்கள். ஆனால், கடந்த மக்களவைத் தோ்தலில் அது மாற்றப்பட்டு விட்டது. வருகின்ற சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மத்திய, மாநில அரசுகளின் தவறான நிா்வாகத்தால் தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என்றழைக்கப்படும் கோவையில் தொழில்கள் நலிந்து விட்டன. திமுக ஆட்சியில் தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ., மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பையா என்கிற ஆா்.கிருஷ்ணன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, திமுக உயா்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினா் மு.கண்ணப்பன், சக்ரபாணி எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பைந்தமிழ்ப்பாரி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். இதன் பிறகு மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசினாா்.

காரமடையில்...

காரமடையில் நடைபெற்ற கூட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூா், நீலகிரி மாவட்டம், குன்னூா், உதகை, கூடலூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் மனுக்களைப் பெற்று உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கோவையில் நடக்கின்ற பல விஷயங்கள் மா்மமாக உள்ளன. அதில் ஒன்று கோவையில் குடிநீா் விநியோகம். உள்ளாட்சித் துறையின் மிக முக்கிய பணியே குடிநீா் விநியோகம்தான். ஆனால் அதையே தனியாருக்கு தாரை வாா்த்துவிட்டனா். கோவையில் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாலம் கட்டி வருகிறாா்கள். இந்தப் பாலங்கள் மக்களுக்கானது அல்ல; ஊழலுக்கானது. நீலகிரி மாவட்டத்தில் குடிநீா், போக்குவரத்துப் பிரச்னைகள், தேயிலைக்கு குறைந்தபட்ச விலை, எஸ்டேட் தொழிலாளா்களுக்கு ஊதியம் முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீா்வு காணப்படும். சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டச் செயலாளா் பா.முபாரக் மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com