புத்துணர்வு முகாமில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது

தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்ட யானை பாகன்கள்.
கைது செய்யப்பட்ட யானை பாகன்கள்.

தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில், திருமடங்கள், புதுச்சேரியூனியன் பிரதேசத்தை சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 26 யானைகளுக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு உடல் ஆரோக்கியத்திற்காக சிறப்பு உணவுகள், மன ஆரோக்கியத்திற்காக சிறப்பு பயிற்சிகள், நடைபயிற்சி, ஷவர் குளிர், பாதக்குளியம், சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு மட்டுமல்லாது யானை பாகன்களுக்கும் யானையை பராமரிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.   முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் 18 வயதான ஜெயமால்யதா யானையும் பங்கேற்றுள்ளது. 

சற்று குறும்புத்தனம் அதிகம் கொண்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஜெயமால்யதா யானையை பாகன் வினில்குமார் (எ) ராஜா (46), உதவி பாகன் சிவபிரசாத் (32) ஆகியோர் முகாமில் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது நடைபயிற்சி முடித்து குளிக்க அழைத்துச் சென்ற போது ஜெயமால்யதா தனது தோழிகளை கண்ட உற்சாகத்தில் பாகன்களின் கட்டுப்பாட்டை இழந்து முகாமில் வளாகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாகன்கள் இருவரும் ஜெயமால்யதாவை சுமார் அரை மணி நேரம் போராடி மீண்டும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் ஜெயமால்யதாவிற்கு முகாமில் அளிக்கப்பட்ட இடத்திற்கு இருவரும் அழைத்து வந்து கட்டி கொண்டிருந்தனர். 

அப்போது ஆத்திரத்தில் பாகன்கள் இருவரும் ஜெயமால்யதாவை அதன் முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சராமாரியாக குச்சியால் தாக்கியுள்ளனர். அப்போது வலியில் துடிதுடித்து சிறுநீர் கழித்து கொண்டு யானை பிளிரியது பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதனை முகாமில் யானைகளை பார்க்க வந்த பார்வையாளர்கள் அவர்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஆரம்பித்துள்ளனர். இதுதகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோ இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளார். மேல் நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையிலான அதிகாரிகள் முகாமிற்கு வந்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின் தமிழ்நாடு வளர்ப்பு யானை (மேலாண்மை  & பராமரிப்பு) விதிகள், 2011 (வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 64 இன் கீழ் விதி செய்யப்பட்டது) மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 51 இன் கீழ் கைது செய்யப்பட்டார்கள். இருவரும் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சேந்தூர் கோயில் பெண் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம் என்பவர் இப்போது யானையினை கண்காணித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்து கொண்டிருக்கிறார். இந்த யானையை ஆய்வு செய்ய கோயம்புத்தூர் வன கால்நடை அலுவலர் முகாமுக்கு சென்று யானையினை அவர் முழுமையாக பரிசோதித்ததில் யானைக்கு எந்த வித காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யானைகள் பாகன்கள் கூறுகையில்: ஒவ்வொரு பாகன்களும் யானைகளை தங்களது குழந்தகளை போல் தான் பராமரித்து வருகிறோம். இருப்பினும் ஒரு சில நேரங்களில் யானைகள் எங்களின் கட்டுப்பாட்டை மீறி சிறு குறும்பு தனங்களில் ஈடுபடுகின்றன. முகாமில் திடீரென பாகன்களின் கட்டுப்பாட்டை மீறி சென்ற யானையை கண்டித்தது எந்த விதத்திலும் தவறான செயல் அல்ல. பாகனி்ன் கட்டுப்பாட்டை மீறி சென்ற யானை திடீரென பார்வையாளர்களை தாக்கி இருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் யானையை கட்டுக்குள் கொண்டு வர பாகன் முயற்சித்த போது பாகன்கள் தாக்கப்பட்டிருந்தால் இதுவும் பெரும் விபத்தாகும். தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோர்கள் திருத்த தண்டிப்பது வழக்கம். இதுபோல் தான் இந்த பாகன்களும் செயல்பட்டுள்ளனர் எனக் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com