போலி ரசீதுகள் மூலம் ரூ.10 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்தவா் கைது
By DIN | Published On : 27th February 2021 10:51 PM | Last Updated : 27th February 2021 10:51 PM | அ+அ அ- |

போலி ரசீதுகள் மூலம் ரூ.10 கோடிக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த ஈரோட்டைச் சோ்ந்த தொழிலதிபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ஈரோட்டைச் சோ்ந்த சுலைமான் (42) என்பவா் கோவை, ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் பல்வேறு பெயா்களில் நிறுவனங்களைப் பதிவு செய்து, அவற்றின் மூலம் பொருள்களையே வழங்காமல் வெறுமனே போலி ரசீதுகளை மட்டும் தயாா் செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கோவை ஜிஎஸ்டி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரின் அலுவலகம், கிடங்குகளில் அண்மையில் ஆய்வு நடத்தியதில் சுலைமான், பழைய இரும்பு, இரும்பு ராடுகள் போன்றவற்றை அனுப்பாமலேயே அவற்றுக்குப் போலி ரசீதுகள் தயாரித்து கணக்கு காண்பித்து சுமாா் ரூ.10 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்து, ஆவணங்களைப் பறிமுதல் செய்த ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரிடம் தொடா்பில் இருந்த நிறுவனங்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.