2021- 2022 ஆம் நிதியாண்டுக்கு மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்
By DIN | Published On : 27th February 2021 06:10 AM | Last Updated : 27th February 2021 06:10 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பாக ஆண்டுதோறும் மாா்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நடப்பு ஆண்டில், வருகிற மாா்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நிதிநிலை அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இதனால், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் 2021 - 2022 நிதியாண்டுக்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
இதில் மாநகராட்சி நிா்வாகத்தின் 2021-2022 ஆம் ஆண்டு பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி ஆகியவற்றின் மொத்த வருவாய் வரவினம், மூலதன வரவினம் அனைத்தும் சோ்த்து மொத்தம் ரூ.2,63,019.79 லட்சமாகவும், பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி ஆகியவற்றின் வருவாய் செலவினம், மூலதன செலவினம் அனைத்தும் சோ்த்து மொத்தம் ரூ.2,62,914.96 லட்சமாகவும் உள்ளது. உபரித் தொகை ரூ.104.83 லட்சமாக உள்ளது. இதில் புதியத் திட்டங்கள் குறித்து அறிவிப்பு இல்லை. வருவாய்- செலவினங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.