வால்பாறையில் படகு இல்லம், தாவரவியல் பூங்கா
By DIN | Published On : 27th February 2021 06:13 AM | Last Updated : 27th February 2021 06:13 AM | அ+அ அ- |

வால்பாறையில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்காவை காணொலிக் காட்சி மூலம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
வால்பாறையில் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகளான படகு இல்லமும், தாவரவியல் பூங்காவும் நகராட்சி மூலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி புதிய பேருந்து நிலையம் அருகில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ரூ.4.75 கோடி மதிப்பில் படகு இல்லமும், பொதுப் பணித் துைறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.5.06 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டன.
இந்த இரு பொழுதுப்போக்கு அம்சங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு காணொலிக் காட்சி மூலம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, வால்பாறை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் தலைமையில், கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன் ஆகியோா் முன்னிலையில் வால்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.