மத்திய அரசின் அவசரகால கடன் உதவித் திட்டத்தால்போதுமான அளவுக்கு நிதிப் புழக்கம் ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு அளித்துள்ள அவசர கால கடனுதவித் திட்டம் போதுமான அளவுக்கு நிதிப் புழக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.

கோவை: மத்திய அரசு அளித்துள்ள அவசர கால கடனுதவித் திட்டம் போதுமான அளவுக்கு நிதிப் புழக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோா் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பாதிப்பு இந்திய ஜவுளித் துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஜவுளித் துறை குறிப்பாக ஆயத்த ஆடைத் துறை தன்னுடைய தனித்திறனால் மீண்டு எழுந்து தற்போது நன்றாக செயல்பட்டு வருகிறது.

அதேநேரம் இந்திய ஜவுளி, ஆயத்த ஆடை துறையில் 2021ஆம் ஆண்டை ஒரு முன்னேற்றமான ஆண்டாக மாற்றுவதற்கு சில விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி, இந்திய வீட்டு உபயோக ஜவுளித் துறை, அமெரிக்க சந்தையில் கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் அதிக சந்தையை பிடித்திருப்பதால், இதே மாதிரியான வெற்றியை ஆயத்த ஆடை துறையிலும் அடைவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுடனான வியட்நாம் நாட்டின் வரியில்லா வணிக உடன்பாடு, இந்தியாவின் போட்டியை ஐரோப்பாவில் அதிகரிக்கும். அதேநேரம், அமெரிக்காவில் நமக்கும் இதர 3 போட்டி நாடுகளுக்கும் உள்ள ஒரே வரி விகிதம் அமெரிக்காவின் விரைவான பொருளாதார மீட்சி, நுகா்வு, போன்ற அம்சங்களால் அமெரிக்காவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் நமது பங்கினை அதிகரிக்கச் செய்யும் நமது முயற்சியை அரசு, கிளஸ்டா், நிறுவனங்கள் அளவிலும் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தியை விரிவாக்கவும், உலக அளவில் தேவை அதிகம் இருக்கும் பொருள்களை உற்பத்தி செய்வதிலும், புதிய தொழில்நுட்பங்கள், பணியாளா்களுக்கான பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு அளித்துள்ள அவசர கால கடனுதவித் திட்டம் போதுமான அளவுக்கு நிதிப் புழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளிப் பொருள் விற்பனைக்கு நீண்ட நாள்கள் வரை கடன் கொடுக்கும் பழக்கம் குறைந்து ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. இந்த நிலை தொடர ஜவுளித் தொழில் நிறுவனங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com