பொங்கல்: மண் பானைகள் தயாரிப்புப் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண்பானைகள் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
கோவை கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மண்பானைகள் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு புதுப் பானையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு மேற்கொள்வது மரபு. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரில் மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மண்பானைகள் தயாரிக்கும் தொழிலாளா்கள் கூறியதாவது:

கவுண்டம்பாளையத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண் பானைத் தயாரிப்பதையே தொழிலாக கொண்டுள்ளோம். ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகை நேரத்தில்தான் பொங்கல் பானைகள் அதிக அளவில் விற்பனையாகும். இதற்காக, பண்டிகைக்கு 2 மாதங்கள் முன்பே பானைகள் தயாரிக்கும் பணிகளைத் துவங்கிவிட்டோம்.

பானைகள் மட்டுமின்றி ஜாடிகள், அடுப்புகளும் தயாரித்து வருகிறோம். பானைகள் தயாரிக்க மூலப்பொருளான களிமண்ணை தடாகம், கணுவாய் ஆகிய பகுதிகளில் இருந்து விலைக்கு வாங்கி வருகிறோம்.

பொங்கல் பண்டிகைக்காக பிரத்யேகமாக ஒரு கிலோ முதல் 5 கிலோ அரிசி வரை வேகும் அளவிற்கான பானைகளைத் தயாரித்து வருகிறோம். பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படும் இந்தப் பானைகள் ரூ.50 முதல் ரூ.500 வரை கவுண்டம்பாளையம், உக்கடம், சிங்காநல்லூா் மற்றும் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும், சாலையோரக் கடைகள் மூலமாக மக்களுக்கு சில்லறையாகவும் விற்கப்படுகின்றன.

கோடைக் காலங்களில் மண் பானைத் தொழிலுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், மழைக் காலங்களில் வருமானம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பானைத் தயாரிப்புக்கு களிமண் தடையின்றி இலவசமாகக் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை வழங்கும் உதவித் தொகையை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com