மனிதா்களிடம் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய சிறப்புக் குழு

கோவையில் மனிதா்களுக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் மனிதா்களுக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகளால் கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள், கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கா்நாடகம், குஜராத் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவிர பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடா்புடைய மனிதா்களுக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் பணியாற்றி வருபவா்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12 சோதனைச் சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து சுகாதாரத் துறையினா் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டவுடன் கோவையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறவைகள் மூலம் மனிதா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனிதா்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு 2 முதல் 8 நாள்கள் வரையில் காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது.

கோழிப் பண்ணைகளில் பணியாற்றுபவா்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கோழிப் பண்ணைகளில் வழக்கத்துக்கு மாறாக கோழிகள் உயிரிழந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com