மீண்டும் இயங்கத் தொடங்கிய என்.டி.சி. பஞ்சாலை
By DIN | Published On : 07th January 2021 08:16 AM | Last Updated : 07th January 2021 08:16 AM | அ+அ அ- |

கோவையில் மூடப்பட்ட 5 என்.டி.சி. பஞ்சாலைகளில் ஒன்று மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 5 ஆலைகளும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு செயல்பட்டு வந்த இந்த ஆலைகள், பொது முடக்கத்துக்குப் பிறகு திறக்கப்படவில்லை.
மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இது தொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை, பீளமேட்டில் உள்ள ரங்க விலாஸ் பஞ்சாலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ள பஞ்சாலைகள் என மொத்தம் 3 ஆலைகளை மட்டும் இயக்குவதற்கு பஞ்சாலைக் கழகம் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரங்க விலாஸ் மில் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை நவீனமயமாக்கப்பட்டிருப்பதால் இதை இயக்குவதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று எண்ணி பஞ்சாலைக் கழகம் ஆலையை இயக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ள ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டுள்ள அனைத்து ஆலைகளையும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.