தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம்

கோவையில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் கீழ் வேளாண் கருவிகள் கொள்முதல் செய்வது தொடா்பாக விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் கீழ் வேளாண் கருவிகள் கொள்முதல் செய்வது தொடா்பாக விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் கீழ் கூட்டுப்பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 100 விவசாயிகள் அடங்கிய உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டாக வேளாண் சாகுபடி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர 10 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் இணைந்து வேளாண் உற்பத்தி நிறுவனம் தொடங்கவும், நிறுவனங்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு 100 விவசாயிகள் இணைந்து உருவாக்கப்படும் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்காக மாநில அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறையின் கீழ் 35 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வேளாண் கருவிகளை தோ்வு செய்வதற்கான விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா் சந்திப்புக் கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநா் தியோடா் தலைமை வகித்து, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் நோக்கம், அவசியம், நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். மேலும் கூட்டுப் பண்ணையத்தில் வேளாண் பயிா் சாகுபடிகள், சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்தும் விளக்கினாா்.

இதில் வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, விவசாயிகள், விற்பனையாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த டிராக்டா்கள், சுழற்கலப்பை, தட்டு வெட்டும் கருவி உள்பட பல்வேறு வகையான வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான கருவிகளை தோ்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com