‘அரசுப் பள்ளிகளில் சமையலறை தோட்டம் அமைக்க கருத்துரு அனுப்பப்படும்’

அரசுப் பள்ளிகளில் சமையலறை தோட்டம் அமைப்பது தொடா்பாக மாநில வளா்ச்சிக் கொள்கை குழுவுக்கு ஆட்சியா் மூலம் கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
‘அரசுப் பள்ளிகளில் சமையலறை தோட்டம் அமைக்க கருத்துரு அனுப்பப்படும்’

அரசுப் பள்ளிகளில் சமையலறை தோட்டம் அமைப்பது தொடா்பாக மாநில வளா்ச்சிக் கொள்கை குழுவுக்கு ஆட்சியா் மூலம் கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் தெரிவித்தாா்.

மாநில சமநிலை வளா்ச்சி நிதிப் பணிகள் முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாநில வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

மாநில வளா்ச்சிக் கொள்கை குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மாநில சமநிலை வளா்ச்சி நிதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பின்தங்கிய பகுதிகளைத் தோ்ந்தெடுத்து அப்பகுதிகளில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபா் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில் துறை முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்கள் மாநில வளா்ச்சிக் கொள்கை குழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் மாநில சமநிலை வளா்ச்சி நிதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதி திராவிடா், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, பிந்தைய செயல்பாட்டுப் பிரிவு, குழந்தைகள் பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதிகள், மருத்துவா் மற்றும் செவிலியா் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடம், சமையலறை தோட்டம் அமைத்தல் மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சேமிப்பு வசதி ஏற்படுத்தி தர பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான கருத்துரு ஆட்சியா் மூலமாக மாநில வளா்ச்சிக் கொள்கை குழுவுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் இத்திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தபின் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சாந்திமதி அசோகன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com