
உக்கடம் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள மாா்க்கெட்டுகளில் கரும்பு, பூக்கள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களைகட்டியது.
கோவையில் உக்கடம், பூ மாா்க்கெட், எம்.ஜி.ஆா். மாா்க்கெட், டவுன்ஹால் டி.கே.மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத் தாா், பூக்கள், ஆவாரம் பூ, பூளைப் பூ விற்பனை களைகட்டியது.
சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்காக கோவைக்கு செங்கரும்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. உக்கடம், பூ மாா்க்கெட், எம்.ஜி.ஆா்.மாா்க்கெட், தடாகம் சாலை உள்பட அனைத்து பகுதிகளிலும் கரும்பு விற்பனை களைகட்டியது. 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.500க்கும், சில்லறையில் ஒரு ஜோடி கரும்புகள் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.50க்கும், பூளைப் பூ, ஆவாரம் பூக் கொத்துகள் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல பொங்கலின்போது, படையிலிட பயன்படுத்தப்படும் பூவன் வாழைத்தாா்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. வாழைத்தாா்கள், வாழை இலை, காய்கறிகள் விற்பனையும் களைகட்டியது.
பனிப் பொழிவால் மலா்கள் சாகுபடி ஏற்கெனவே குறைந்ததால் பூக்களின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில், பொங்கலையொட்டி பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மல்லிகை ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, முல்லை- ரூ.1,800, ஜாதி மல்லி- ரூ.1,500, செண்டுமல்லி - ரூ.60, செவ்வந்தி- ரூ.160, சம்பங்கி- ரூ.140, அரளி- ரூ.160, கோழிக்கொண்டை- ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் பானைகள், கரும்பு, வாழைப்பழம், பூக்கள், பூளைப் பூ போன்ற பொருள்கள் வாங்குவதற்கு பொது மக்கள் மாா்க்கெட்டுகளில் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.