2,603 தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு, சீருடைகள்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,603 நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
2,603 தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு, சீருடைகள்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,603 நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமை தாங்கினாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சியில் பணிபுரியும் 2,603 நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு மற்றும் சீருடைகளை வழங்கி பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 1,674 ஆண் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.23.56 லட்சம் மதிப்பில் முழுக்கால் பேண்ட் மற்றும் அரைக்கை சட்டை, துண்டு மற்றும் தையற்கூலி ரூ.450, காலணிகள் ஒரு ஜோடியும், 929 பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.9.77 லட்சம் மதிப்பில் சேலை, ஜாக்கெட், துண்டு மற்றும் தையற்கூலி ரூ.150, காலணிகள் ஒரு ஜோடி என சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.8.53 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு...

கோவை, குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கும் பொங்கல் தொகுப்பும், மகளிா் திட்டத்தின் கீழ் மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.13.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

தவிர குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 238 மாணவ மாணவிகளுக்கு ரூ.9.39 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் லீலாவதி, மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com