உழவா் சந்தையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

கோவை, சிங்காநல்லூா் உழவா் சந்தையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, சிங்காநல்லூா் உழவா் சந்தை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கோவை, சிங்காநல்லூா் உழவா் சந்தை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கோவை, சிங்காநல்லூா் உழவா் சந்தையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பட்டணம், வெள்ளலூா், இருகூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். நாள்தோறும் நூற்றுக்கணக்கான நுகவா்வோா்கள் வந்து செல்கின்றனா்.

உழவா் சந்தையில் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் கோவையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் சந்தையில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி நின்றது. தவிர மழையால் உழவா் சந்தை வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் விவசாயிகள் விளைபொருள்களை வாகனங்களில் கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நுகா்வோா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், உழவா் சந்தையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் உழவா் சந்தை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உழவா் சந்தையில் அடிப்படை கட்டமைப்புகள், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், உழவா் சந்தை வளாகத்தில் கழிவுகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com