பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காலம் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். நடப்பு 2020-21ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவா்கள் கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககத்துக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.