முறைகேடு புகாா் எதிரொலி: சொத்து விவரங்களை சமா்ப்பிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவு

கோவை மாநகராட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் தங்களின் சொத்து விவரங்களை சமா்ப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் தங்களின் சொத்து விவரங்களை சமா்ப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் நடத்தை விதிகள் 1973 இன் படி, அரசுப் பணியாளா்கள் தங்களின் பெயரிலோ, குடும்ப உறுப்பினா்களின் பெயரிலோ அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்குவது, விற்பது மற்றும் காலி மனை வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதற்கான நிதி ஆதாரங்களை சம்பந்தப்பட்ட துறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதன்படி அரசுப் பணியாளா்கள் பணியில் சோ்ந்த காலத்தில் இருந்த சொத்துகள், கடன் விவரம் மற்றும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விவரங்களை அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோா், இந்த சொத்துப் பட்டியலை சமா்பிப்பது இல்லை.

கோவை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி மேயா், கவுன்சிலா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறாத நிலையில், மாநகராட்சி ஆணையா் பணி குறித்த தீா்மானங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்ற சிறப்பு தனி அலுவலராக செயல்பட்டு வருகிறாா்.

5 மாநகராட்சி மண்டலங்களிலும் உதவி ஆணையரின் கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தலையீடுகளின்றி வரவு செலவு மேற்கொள்ளப்படுவதால், மாநகராட்சி அதிகாரிகள் சிலா் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்திருப்பதாகவும் மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் ஆகியோா் உடனடியாக தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களின் பட்டியலை மாநகராட்சி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், பாரபட்சமின்றி அனைத்து மாநகராட்சி அலுவலா்கள், அதிகாரிகள் தங்களின் சொத்துப் பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். சமா்ப்பிக்க தவறியவா்கள் மீதும், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்படுபவா்கள் மீதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் நடத்தை விதிகளின் கீழ் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com