சிறுபான்மையினருக்கான லோன் மேளா

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை: கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிப்ரவரி 2 ஆம் தேதி கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள நகர கூட்டுறவு வங்கியிலும், ரயில் நிலையம் எதிரிலுள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும், 3ஆம் தேதி பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கி, மதுக்கரை மாா்க்கெட் பிரதான சாலையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும், 4 ஆம் தேதி மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி, போத்தனூா் பிரதான சாலையில் (சுந்தராபுரம்) உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும், 5ஆம் தேதி பொள்ளாச்சி, வெங்கேடசா காலனியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும், 6ஆம் தேதி கரும்புக்கடை பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் முகாம் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உள்பட்ட சிறுபான்மையினா்கள் (கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஜாதிச் சான்று, ஆதாா், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவா்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கேட்கும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்களின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com