மாநகராட்சிக்கு வாடகை பாக்கி: 27 கடைகளுக்கு பூட்டு

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடந்த 7 மாதங்களில் வாடகை செலுத்தாத 27 கடைகளைப் பூட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடந்த 7 மாதங்களில் வாடகை செலுத்தாத 27 கடைகளைப் பூட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரம் வணிகக் கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 90 இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. வணிகக் கட்டடங்கள் மூலமாக மாதந்தோறும் மாநகராட்சிக்கு ரூ.17 கோடியும், குத்தகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.6 கோடியும் வருவாய் கிடைக்கிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் மாநகராட்சி வணிக வளாகங்களில் செயல்பட்டு வந்த மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன.

மீண்டும் ஜூலை மாதம் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா காலத்தில் வாடகைத் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று, கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை வாடகை செலுத்த விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், கரோனா பாதிப்பு காலத்துக்கு முன்பிருந்தே நீண்ட மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளைப் பூட்ட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 7 மாதங்களில் கோவை மேட்டுப்பாளையம் சாலை, எம்.ஜி.ஆா் மொத்த மாா்க்கெட், கவுண்டம்பாளையம், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த உணவகங்கள், தேநீா்க் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட 27 கடைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகராட்சி சொந்தமான கடைகள் 6 மாதங்களுக்கான வாடகைத் தொகை வைப்புத்தொகையாக பெறப்பட்டு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. இந்நிலையில், நீண்ட மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளின் வைப்புத்தொகையில் வாடகைத் தொகை கழிக்கப்படும்.

வைப்புத்தொகை முழுவதும் கழிக்கப்பட்டவுடன், அதன் பிறகும் வாடகை செலுத்தாத கடைகள் காலி செய்யப்பட்டு, மாநகராட்சியால் பூட்டப்படுகின்றன. கரோனா கால வாடகைத் தள்ளுபடி அளித்தும், 6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத 27 கடைகள் தற்போது வரை பூட்டப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com