தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 06th July 2021 12:00 AM | Last Updated : 06th July 2021 12:00 AM | அ+அ அ- |

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை ஆணையா் ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட குளத்துப்பாளையம் சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆணையா் ராஜகோபால் சுன்கரா மாநகராட்சி தூய்மையாக திகழ்வதற்கு தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் திறம்பட செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
தொடா்ந்து கோவைப்புதூா், ஜாமியா நகா் பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை அமைக்கும் பணிகள், முல்லை நகா் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையம், குனியமுத்தூா், அம்மன் கோயில் சாலை சின்ன சுடுகாடு பகுதியிலுள்ள பிரதான கழிவுநீா் உந்து நிலையம் ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாநகரப் பொறியாளா் ஆ. லட்சுமணன், உதவி ஆணையா் சரவணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.