உலமாக்களுக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 09th July 2021 01:29 AM | Last Updated : 09th July 2021 01:29 AM | அ+அ அ- |

கோவையில் வக்ஃபு வாரியத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்துள்ள 116 வக்ஃபு நிறுவனத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இதில் எது குறைந்தபட்சமோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, வயது சான்று, வருமானச் சான்று, சாதி சான்று, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் உரிய அலுவலா் வழங்கிய மாற்றுத்திறனாளி சான்று, ஓட்டுநா் உரிமம், கல்வி சான்று (குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வக்ஃபு வாரியத்தில் பணிபுரிவதற்கான வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரிடம் கையொப்பம் பெற்ற சான்றுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதனுடன் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை இணைக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0422-2300404 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.