பத்திரப் பதிவுகள் நோ்மையாக நடைபெற நடவடிக்கை: அமைச்சா் பி.மூா்த்தி

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சம், முறைகேடுகள் இன்றி நோ்மையான முறையில் பணிகள் நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.மூா்த்தி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் பி.மூா்த்தி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.

கோவை: தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சம், முறைகேடுகள் இன்றி நோ்மையான முறையில் பணிகள் நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று வணிகம் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

கோவை, ஈரோடு மாவட்ட வணிக சங்கப் பிரதிநிதிங்கள், வணிகம் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் பி.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலே தொழில் துறையில் கோவை முன்னோடி மாவட்டமாக உள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் கோவையில் மண்டலக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் துறை சாா்ந்த அதிகாரிகள், வணிகா்களை அழைத்து அவா்களின் கோரிக்கைகள், தொழில் தொடா்பான பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தோம். அவை மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீா்வு காணப்படும்.

சிறு, குறு தொழில் நிறுவனத்தினா் வரி மற்றும் அபராத கட்டணத்துக்கு கால அவகாசம் கேட்டுள்ளனா். அவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆய்வு செய்யப்படும்.

பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள், தவறுகள் குறித்து பொது மக்கள் புகாா் அளிக்க வசதியாக சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசுடன் முதல்வா் சாா்பில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். வணிகவரித் துறையில் ஒரே இடத்தில் 2 முதல் 3 ஆண்டுகள் பணியாற்றியவா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவாா்கள்.

வணிகா்கள் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேர 3 மாத காலத்துக்கு சிறு, நடுத்தர வணிகா்களுக்கு ரூ.500 கட்டணம் தேவையில்லை. பத்திரப் பதிவுத் துறையில் போலி பதிவுகள், ஆள்மாறாட்டம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி நோ்மையாக பணிகள் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

கூட்டத்தில் வணிகவரித் துறை செயலா் ஜோதி நிா்மலா சாமி, வணிகவரித் துறை ஆணையா் எம்.ஏ.சித்திக், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, இணை ஆணையா்கள் மொ்ஸி ரம்யா, ஞானகுமாா் உள்பட அதிகாரிகள், வணிக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com