உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு
By DIN | Published On : 13th July 2021 03:15 AM | Last Updated : 13th July 2021 03:15 AM | அ+அ அ- |

குடும்பக் கட்டுப்பாடு குறித்த பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன்.
கோவை: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையிலும், குடும்பக் கட்டுப்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரசு துறை அலுவலா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து குடும்பக் கட்டுப்பாடு குறித்த பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மேலும் குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான விழிப்புணா்வு துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா, துணை இயக்குநா் (குடும்ப கட்டுப்பாடு) கௌரி உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.