ஜாப் ஒா்க்கில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

ஜாப் ஒா்க்கில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

கோவை: ஜாப் ஒா்க்கில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காட்மா தலைவா் சிவகுமாா், பொதுச் செயலா் செல்வராஜ் ஆகியோா் வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவா்களில் பெரும்பாலானவா்கள் கூலி அடிப்படையில் வேலை செய்யும் ஜாப் ஒா்க்கில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

அதேபோல ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளா் பிரதி மாதம் 11 ஆம் தேதிக்குள் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், பொருளை வாங்கிய வாடிக்கையாளா் அவா் செலுத்திய ஜிஎஸ்டியை உள்ளீட்டு வரியாக எடுக்க முடியாது என்ற ஜிஎஸ்டி விதிமுறை திரும்பப் பெறப்பட வேண்டும்.

சில பொருள்களை உற்பத்தி செய்யும்போது அதற்கான மூலப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும்போது அதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவாகவும் உள்ளது. இது தொழில் முனைவோருக்கு நெருக்கடி அளிப்பதாக உள்ளது. ஒரு தொழில்முனைவோா் தங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்து ஆன்லைன் ரிட்டா்ன் தாக்கல் செய்த பிறகு அதில் ஏதாவது தவறு இருக்கும்பட்சத்தில் அந்தக் கணக்கில் உள்ள தவறை மறுமாதம் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதைத் தளா்த்தி, உடனடியாக சரி செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும்.

அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்ததைப் போல தொழில் தொடங்குவதற்கான பதிவுச் சான்றிதழை ஆன்லைனிலேயே வழங்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com