நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு
By DIN | Published On : 13th July 2021 03:18 AM | Last Updated : 13th July 2021 03:18 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமில்லா பயணச் சீட்டு திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்களுக்கும் இலவச பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச் சீட்டு அச்சிடப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள், உதவியாளா்கள், திருநங்கைகளுக்கு ஏற்கெனவே கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்பட்டது.
கோவை மாநகரில் 280 சாதாரண கட்டணப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதன் மூலம் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எந்ததெந்த வழித்தடத்தில் எத்தனை போ் பயணிக்கின்றனா் என்ற விவரங்கள் தெரியவரும் என போக்குவரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.