பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்ட பணிக்காக 23 ஏக்கா் நிலங்கள் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்ட பணிக்காக 23 ஏக்கா் நிலங்கள் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்ததும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டம் ரூ.970 கோடியில் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து மொத்தம் 113 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.105 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்துவது தொடா்பாக விவசாயிகள், மக்களிடம் கடந்த சில மாதங்களாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து நிலங்கள் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை நில உரிமையாளா்களுக்கு ரூ.20 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு, 23 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, நிறுவனங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தினமும் மாநகராட்சிக்கு 178 எம்.எல்.டி. குடிநீா் கிடைக்கும் வகையில் பில்லூா் 3ஆவது குடிநீா்கஈ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக குடிநீா் எடுக்கும் இடத்தில் இருந்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடம் வரை 4 கிலோ மீட்டா் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைத்து தண்ணீா் கொண்டு வரப்படும். மேலும் 55 கிலோ மீட்டா் தூரத்துக்கு குடிநீா்க் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்காக 30 ஏக்கா் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. தனியாரிடம் இருந்து 113 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

இதில் முதல்கட்டமாக 135 நில உரிமையாளா்களிடம் இருந்து 23 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 300க்கும் மேற்பட்ட நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com